இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி பங்குதாரரான டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்டதாகக் கூறப்படும் இணையத் தரவு கசிவு தொடர்பாக இந்திய அரசு தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்த தரவு கசிவில், இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படாத iPhone 18 Pro தொடர்பான முக்கிய ரகசிய தகவல்கள், உதிரிபாக பட்டியல்கள், சப்ளையர் விவரங்கள் மற்றும் படங்கள் ஆகியவை டார்க் வெப்பில் வெளியிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் எஸ். கிருஷ்ணன், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், இந்தியாவின் தேசிய சைபர் பாதுகாப்பு அமைப்பான CERT-In-க்கு விசாரணை ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த கசிவு, ஆப்பிளின் உலகளாவிய உற்பத்திச் சங்கிலியின் பாதுகாப்பு குறித்து புதிய கவலைகளை எழுப்பியுள்ளது. கசிந்த ஆவணங்களில், ஆப்பிள் பொதுவாக வெளியிடாத உதிரிபாக வழங்குநர் விவரங்களும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
சம்பவத்தையடுத்து டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சர்வதேச தடயவியல் (Forensic) நிபுணர்களை நியமித்து விரிவான விசாரணையை முன்னெடுத்து வருகிறது.
மேலும், இதே இணையத் தாக்குதலில் Tesla, Qualcomm மற்றும் TSMC நிறுவனங்களின் ஆவணங்களும் டார்க் வெப்பில் வெளியிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
iPhone 18 Pro மற்றும் iPhone 18 Pro Max மாடல்கள் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.





