இலங்கையின் சுற்றுலாத்துறையிலிருந்து ஈட்டப்பட்ட வருமானம், கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு சரிவைக் கண்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியின் அறிக்கையின்படி, இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில் சுற்றுலாத்துறையிலிருந்து 1,511.1 மில்லியன் அமெரிக்க டொலர்களே வருமானமாகப் கிடைத்துள்ளன. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் இந்த வருமானம் 1,712.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருந்தது.
கடந்த மே மாதம் 155.7 மில்லியன் டொலர்களாக இருந்த சுற்றுலா வருமானம், ஜூன் மாதத்தில் 151.1 மில்லியன் டொலர்களாகக் குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஈட்டப்பட்ட 169.5 மில்லியன் டொலர் வருமானத்துடன் ஒப்பிடுகையில், இது குறிப்பிடத்தக்க சரிவாகும்.
இதற்கிடையில், வெளிநாட்டுப் பணப்பரிமாற்றத்திலும் மே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூன் மாதத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
மே மாதம் 847 மில்லியன் டொலர்களாக இருந்த வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம், ஜூன் மாதத்தில் 695 மில்லியன் டொலர்களாகக் குறைந்துள்ளது. இது 152 மில்லியன் டொலர் குறைவு என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
இருப்பினும், கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ஈட்டப்பட்ட மொத்த வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு முதல் ஆறு மாதங்களில் 3,738 மில்லியன் டொலர்களாக இருந்த இந்த வருமானம், இவ்வருடத்தின் அதே காலப்பகுதியில் 4,604.8 மில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது.
இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 866.8 மில்லியன் டொலர் அதிகரிப்பாகும்.





