✍️ ஷாதிர் ஏ. ஜப்பார்

சம்மாந்துறை பிரதேசத்தில் “சமூக நல்லிணக்கத்திற்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பு” என்ற தொனிப்பொருளில், “சுற்றுச்சூழல் செயற்பாட்டினூடாக இன நல்லுறவை வலுப்படுத்துதல், மத நம்பிக்கைகளுக்கு மதிப்பளித்தல்” என்ற கருப்பொருளின் அடிப்படையில் விழிப்புணர்வு மற்றும் சமூக சிரமதான நிகழ்வு இன்று (17) காலை 8.30 மணியளவில் வீரமுனை RKM வித்தியாலயத்திற்கு அருகில் நடைபெற்றது.

இந்நிகழ்வு சம்மாந்துறை 10, 12 மற்றும் வீரமுனை 1, 2, 3, 4 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்புக் குழுக்களின் ஏற்பாட்டில், GAFSO நிறுவனத்தினுடைய ஒருங்கிணைப்பில், சம்மாந்துறை பிரதேச செயலகம்,பிரதேச சபை மற்றும் பொலிஸ் நிலையம், GAFSO அமைப்பின் தன்னார்வ இளைஞர் செயற்பாட்டாளர்கள், பிரதேச மக்கள், பொதுமக்கள் ஆகியோரின் பங்களிப்புடன் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து S.L.M. ஹனிபா கலந்து கொண்டார். மேலும், சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிஷாந்த பிரதீப் குமார், GAFSO நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் A.J. காமில் இம்டாட், வீரமுனை RKM வித்தியாலய அதிபர், வீரமுனை 1, 2, 3, 4 கிராம சேவகர் பிரிவுகளின் கிராம அலுவலர்கள், சம்மாந்துறை பிரதேச செயலக மற்றும் பிரதேச சபை அதிகாரிகள், நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் H.R.M. இஸ்மத், சமூகத் தலைவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

நிகழ்வின் போது சுற்றுப்புறச் சுத்தப்படுத்தல், கழிவுகளை முறையாக அகற்றுதல், மரநடுகை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் சமூக சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இந்நிகழ்வின் செயற்பாட்டு வழிநடத்துநர்களாக (Facilitators) S. Dishani மற்றும் N. Niflan ஆகியோர் செயற்பட்டு, சமூகப் பங்களிப்பு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் வகையில் நிகழ்வை வெற்றிகரமாக வழிநடத்தினர்.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது என்பது இயற்கையைப் பாதுகாப்பதற்கான கடமையாக மட்டுமன்றி, பல்வேறு இன, மத மக்களிடையே புரிந்துணர்வு, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வளர்க்கும் சிறந்த சமூகச் செயற்பாடாகும் என்பதை இந்நிகழ்வு மீண்டும் உறுதிப்படுத்தியது. அதேவேளை, சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிப்பதோடு, பல்வேறு சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமை, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் இன நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் ஒரு முன்மாதிரி சமூக முயற்சியாகவும் இந்நிகழ்வு அமைந்தது.










