பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA), 1.8 கிலோகிராமுக்கும் அதிகமான கொக்கெய்ன் போதைப்பொருளை கடத்த முயன்றதாக 23 வயதான மலேசிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு (NCU) மேற்கொண்ட சோதனையின் போது, சந்தேகநபரின் கைப்பையில் இருந்த உணவு மற்றும் இனிப்பு பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 92 காப்ஸ்யூல்களில் 1,816 கிராம் கொக்கெய்ன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர், துபாய் ஊடாக மலேசியாவில் இருந்து Emirates EK650 விமானம் மூலம் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட கொக்கெய்னின் சந்தை பெறுமதி சுமார் 9 கோடியே 8 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆரம்ப விசாரணைகளின் பின்னர், சந்தேகநபர், கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்திடம் (PNB) ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சர்வதேச ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களை தடுப்பதற்கும், நாட்டின் சர்வதேச நுழைவாயில்கள் ஊடாக போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்துவதற்குமான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.





