நுளம்புகள் பெருகுவதற்கு ஏதுவான வகையில் சுற்றுச்சூழலை பராமரித்தமை தொடர்பாக, 2026 ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில் 4,672 வழக்குகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், சுகாதார அமைச்சு, பொது சுகாதார பரிசோதகர்கள் (PHI) மற்றும் இலங்கை பொலிஸார் இணைந்து நாடு முழுவதும் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நுளம்புகள் பெருகும் இடங்களை வைத்திருப்பவர்கள் அல்லது தங்களது வளாகங்களை நுளம்பு பெருக்கத்திற்கு ஏதுவாக அசுத்தமாக பராமரிப்பவர்களுக்கு எதிராக தண்டனைச் சட்டக் கோவையின் 262ஆவது பிரிவின் கீழ் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், 2007 ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க நுளம்புகள் பெருகுவதைத் தடுக்கும் சட்டத்தின் கீழ், நுளம்புகள் பெருகும் இடங்கள் கண்டறியப்பட்டால் அல்லது வளாகங்கள் அசுத்தமாக பராமரிக்கப்பட்டால், சுகாதார அதிகாரிகளால் ‘சிவப்பு எச்சரிக்கை’ (Red Notice) அறிவித்தல் வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த எச்சரிக்கையை புறக்கணித்து, அறிவுறுத்தல்களை உரிய காலத்திற்குள் நிறைவேற்றத் தவறும் நபர்களுக்கு எதிராக சட்டத்தின் 6ஆவது பிரிவின் கீழ் அதிகபட்சமாக 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.





