பிரான்ஸ்: 15 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதைத் தடை செய்யும் சட்ட மசோதாவை பிரான்ஸ் நாடாளுமன்றம் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றியுள்ளது.
இதன் மூலம், 15 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகப் பயன்பாட்டுக்கு சட்டரீதியான வயது வரம்பை அறிமுகப்படுத்திய முதல் ஐரோப்பிய ஒன்றிய (EU) நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது.
இந்த சட்டத்திற்கு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வலுவான ஆதரவு வழங்கியிருந்தார். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மசோதாவில் அவர் விரைவில் கையொப்பமிடவுள்ளார்.
சட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, “இந்த கல்வியாண்டு முதல் 15 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை செய்யப்படும்” என்று மக்ரோன் சமூக வலைத்தளமான X-இல் தெரிவித்துள்ளார்.
மேலும், “எமது குழந்தைகளின் மூளையும் உணர்வுகளும் விற்பனைக்கானவை அல்ல. வெளிநாட்டு தளங்களோ அல்லது அல்கோரிதம்களோ அவற்றை கட்டுப்படுத்த அனுமதிக்க முடியாது” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
புதிய கல்வியாண்டு செப்டெம்பரில் ஆரம்பமாகும் முன்னர் இந்தச் சட்டத்தை அமல்படுத்தும் வகையில் அரசு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு மக்ரோன் முன்னதாக உத்தரவிட்டிருந்தார்.
இந்தச் சட்டத்தின் கீழ், சமூக ஊடக நிறுவனங்கள் பயனர்களின் வயதை எவ்வாறு சரிபார்க்கும் என்பது இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை. இருப்பினும், வயது உறுதிப்படுத்தும் நடைமுறைகள் கட்டாயப்படுத்தப்படும் என பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
இந்தச் சட்டத்தை Arcom எனப்படும் பிரான்சின் ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் தொடர்பாடல் ஒழுங்குமுறை ஆணையம் அமல்படுத்தவுள்ளது. இது முக்கியமான அனைத்து சமூக ஊடக தளங்களுக்கும் பொருந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னர், 16 வயதுக்குட்பட்டோருக்கான சமூக ஊடகத் தடையை அமல்படுத்திய உலகின் முதல் நாடாக அவுஸ்திரேலியா மாறியிருந்தது. அதேவேளை, பிரிட்டன், ஸ்பெயின், கிரீஸ் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளும் இதேபோன்ற வயது வரம்பு சட்டங்களை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.





