உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்குப் பின்னர் அர்ஜென்டினா அணியின் வீரர்கள் தொடர்பாக இடம்பெற்ற சர்ச்சைக்குரிய சம்பவங்கள் குறித்து FIFA விசாரணை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், “Argentina Out” என்ற தலைப்பில், அர்ஜென்டினாவை உலகக் கிண்ணப் போட்டிகளில் இருந்து நிரந்தரமாக நீக்கக் கோரி தொடங்கப்பட்ட இணையவழி மனுவில் 2 கோடியே 33 லட்சத்திற்கும் அதிகமானோர் (23,316,108) கையெழுத்திட்டுள்ளனர்.
இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி, அர்ஜென்டினாவை கூடுதல் நேரத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.
போட்டி முடிவடைந்த பின்னர் அர்ஜென்டினா வீரர்கள் சிலர் ஸ்பெயின் வீரர்களுடன் மோதலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து Nahuel Molina, Leandro Paredes, Thiago Almada மற்றும் உதவி பயிற்சியாளர் Roberto Ayala ஆகியோர் தொடர்பில் FIFA ஒழுக்காற்று விசாரணை ஆரம்பித்துள்ளது.
மேலும், காலிறுதிப் போட்டியில் நடுவர் முடிவுகள், ரசிகர்களின் நடத்தை, இனவெறி கோஷங்கள் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் காரணமாக, இம்முறை உலகக் கிண்ணம் குறித்து சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
“அர்ஜென்டினாவுக்கு சாதகமாக FIFA மற்றும் நடுவர்கள் செயல்பட்டனர்” எனக் குற்றஞ்சாட்டிய மனுவில், “வெற்றியாளர் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தால் மற்ற அணிகள் ஏன் போட்டியிட வேண்டும்?” என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இந்த மனுவுக்கு 170 நாடுகளைச் சேர்ந்த 2.3 கோடிக்கும் அதிகமானோர் ஒரு வாரத்திற்குள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம், 1997 ஆம் ஆண்டு உலகின் ஏழை நாடுகளின் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி தொடங்கப்பட்ட “Jubilee 2000” மனு பெற்றிருந்த 24,319,181 கையெழுத்துகள் என்ற கின்னஸ் உலகச் சாதனையை இந்த மனு மிக நெருக்கமாக எட்டியுள்ளது.





