ஆஸ்திரியாவின் பிரௌனௌ ஆம் இன் (Braunau am Inn) நகரில், நாசி ஜெர்மனியின் முன்னாள் சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர் பிறந்த வீடு அதிகாரப்பூர்வமாக பொலிஸ் நிலையமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டிடம் நவ-நாசி ஆதரவாளர்கள் வழிபாட்டு தலமாக மாறுவதைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கில், பல ஆண்டுகளாக நீடித்த விவாதங்களுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

1889 ஆம் ஆண்டு ஹிட்லர் பிறந்த இந்த வீடு, பின்னர் முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டு அதன் வெளிப்புற தோற்றமும் மாற்றப்பட்டுள்ளது. ஹிட்லரின் குடும்பம் அங்கு சில வாரங்கள் மட்டுமே வசித்திருந்தாலும், அந்த இடம் நாசி ஆதரவாளர்களின் கவனத்தை தொடர்ந்து ஈர்த்துவந்தது.
2016 ஆம் ஆண்டு ஆஸ்திரிய அரசு சட்டம் மூலம் அந்த வீட்டை அரசுடமையாக்கி, உரிமையாளருக்கு இழப்பீடு வழங்கியது. பின்னர் கட்டிடத்தை இடிக்க வேண்டும் என்ற யோசனை கடும் எதிர்ப்பை சந்தித்ததையடுத்து, அதை பொலிஸ் நிலையமாக மாற்ற அரசு தீர்மானித்தது.
கட்டிடத்தின் வெளியே உள்ள நினைவுக் கல்லில் “அமைதி, சுதந்திரம், ஜனநாயகம் – இனி ஒருபோதும் பாசிசம் இல்லை” என்ற வாசகம் மட்டுமே இடம்பெற்றுள்ளது. ஹிட்லரின் பெயர் எங்கும் குறிப்பிடப்படவில்லை.

அதேவேளை, நவ-நாசி ஆதரவாளர்களின் வருகையை கண்காணிக்கும் வகையில் பாதுகாப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.





