கொழும்பு: போலியான இறக்குமதி பரிவர்த்தனைகள் மூலம் அமெரிக்க டொலர் 715 மில்லியன் (சுமார் ரூ.214.7 பில்லியன்) சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID) நாடாளுமன்றத்தின் பொது நிதி தொடர்பான குழுவில் (COPF) தெரிவித்துள்ளது.
CID-யின் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட தெரிவித்ததாவது, 2023 ஜனவரி முதல் 2026 மார்ச் வரை 105 நிறுவனங்கள் ஊடாக சுமார் 24,300 டெலிகிராபிக் பரிமாற்றங்கள் (TT) மூலம் இந்தப் பணம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், அதற்கான பொருட்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டதாக எந்த ஆதாரமும் இல்லை.
விசாரணைகளில், 105 நிறுவனங்கள், 55 சந்தேகநபர்கள் மற்றும் 227 வங்கி கணக்குகள் இந்த மோசடியுடன் தொடர்புடையதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
போலியான விலைப்பட்டியல்கள் (Invoices) மற்றும் சுங்க ஆவணங்களை தயாரித்து வங்கிகளில் சமர்ப்பித்து இந்த பணப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், 13 அரச மற்றும் தனியார் வங்கிகள் இந்த பரிவர்த்தனைகளில் பயன்படுத்தப்பட்டதாகவும் CID தெரிவித்துள்ளது.
இதுவரை, சுமார் 43 மில்லியன் அமெரிக்க டொலரை 43 நிறுவனங்கள் ஊடாக வெளிநாடுகளுக்கு அனுப்பியதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மோசடி வலையமைப்புக்கு துபாயை மையமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச போதைப்பொருள் பணச் சலவை கும்பலுடன் தொடர்பு இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக, இன்டர்போல் உதவியுடன் துபாயிலிருந்து இரு முக்கிய சந்தேகநபர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கின் மேலதிக விசாரணைகளை CID-யின் நிதி குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் சட்டவிரோத சொத்துகள் தொடர்பான புலனாய்வு பிரிவு தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன.
– NewsWire





