BBC சிங்கள சேவையின் இரு ஊடகவியலாளர்கள் பாராளுமன்ற சிறப்புரிமைக் குழுவில் ஆஜராக வேண்டியிருந்த விசாரணை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜூலை 23ஆம் திகதி நடைபெறவிருந்த குறித்த விசாரணை இனி இடம்பெறாது என BBC சிங்கள சேவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், விசாரணை இரத்துச் செய்யப்பட்டதற்கான காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
BBC சிங்கள சேவையின் தயாரிப்பாளர் இஷாரா தனசேகர மற்றும் ஊடகவியலாளர் சம்பத் திஸாநாயக்க ஆகியோர் பாராளுமன்ற சிறப்புரிமைக் குழுவில் ஆஜராக அழைக்கப்பட்டிருந்தனர்.
தேசிய மக்கள் சக்தி (NPP) பாராளுமன்ற உறுப்பினர் லக்மலி ஹேமச்சந்திர முன்வைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பெண்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கூட்டம் தொடர்பான BBC சிங்கள செய்தியில் தவறான தகவல்கள் வெளியிடப்பட்டதாகவும், பாராளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும், உயர்மட்ட சிறுவர் துஷ்பிரயோக வழக்கு தொடர்பான இரகசிய தகவல்கள் வெளியிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஊடகவியலாளர்கள் பாராளுமன்ற குழுவிற்கு அழைக்கப்பட்டமைக்கு ஊடக அமைப்புகள், உரிமை அமைப்புகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் (SLWJA), இந்த நடவடிக்கையை ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாகக் குறிப்பிட்டு, அழைப்பை மீளப் பெறுமாறு கோரியிருந்தது.
பல நாட்களாக நிலவிய எதிர்ப்புகள் மற்றும் விமர்சனங்களுக்கு பின்னர், குறித்த விசாரணை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





