இலங்கையைச் சேர்ந்த Seahorse Air Ceylon என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம், Vertical Take-Off and Landing (VTOL) விமானங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை இலங்கையில் நிறுவுவதற்கான முன்மொழிவை சமர்ப்பித்துள்ளது.
இதற்காக நிறுவனத்தின் பிரதிநிதிகள், இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் (CAASL) பணிப்பாளர் நாயகமும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கேப்டன் தமிந்த ரம்புக்வெல்ல அவர்களைச் சந்தித்து, Advanced Air Mobility (AAM) துறையை மையமாகக் கொண்ட விமான உற்பத்தித் திட்டம் குறித்து விளக்கமளித்துள்ளனர்.
CAASL தெரிவித்ததாவது, Seahorse Air Ceylon நிறுவனம் ஏற்கனவே இலங்கை முதலீட்டு சபையில் (BOI) பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், ஆய்வு, மேம்பாடு மற்றும் சோதனை நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்குத் தேவையான ஒழுங்குமுறை அனுமதிகளைப் பெற்றுவருகிறது.
சந்திப்பின் போது, திட்டத்தின் ஆரம்ப கட்டங்களில் பின்பற்றப்பட வேண்டிய ஒழுங்குமுறை நடைமுறைகள், சான்றிதழ் வழங்கல் செயல்முறைகள் மற்றும் தேசிய, சர்வதேச விமானப் பாதுகாப்பு தரநிலைகள் குறித்து CAASL அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
இந்த முயற்சியை வரவேற்ற கேப்டன் தமிந்த ரம்புக்வெல்ல, புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படும் போதும் விமானப் பாதுகாப்பு, பாதுகாப்பு கண்காணிப்பு மற்றும் ஒழுங்குமுறை இணக்கம் ஆகியவை உறுதிப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
இந்தத் திட்டம், இலங்கையின் விமானப் போக்குவரத்து துறையின் வளர்ச்சிக்கும், உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் Advanced Air Mobility (AAM) துறையில் இலங்கையின் பங்களிப்பை அதிகரிப்பதற்கும் முக்கிய வாய்ப்பாக அமையும் என CAASL தெரிவித்துள்ளது.
VTOL விமானங்கள், ஓடுபாதை இன்றி செங்குத்தாக புறப்பட்டு தரையிறங்கும் திறன் கொண்டவை. குறுகிய தூர பயணிகள் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு விமானப் போக்குவரத்து சேவைகளுக்காக இந்த தொழில்நுட்பம் உலகளவில் அதிக கவனம் பெற்று வருகிறது.





