கொழும்பு, ஹோமாகம பகுதியில் PickMe மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவரை கொலை செய்து கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரது தந்தையை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஹோமாகம, கலகாஹேன பகுதியில் கடந்த ஜூலை 16ஆம் திகதி கால்வாய் ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட வாடகை மோட்டார் சைக்கிள் சாரதியின் சடலம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.
CCTV காட்சிகள் மற்றும் விசாரணைகளின் மூலம், குறித்த சாரதியை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்ற நபரே கொலை செய்து, அவரது மோட்டார் சைக்கிள், தங்கச் சங்கிலி, கையடக்கத் தொலைபேசி மற்றும் பணப்பையை கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவத்திற்கு மற்றுமொரு நபர் உதவியுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட இருவரும் தந்தை மற்றும் மகன் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்று மற்றும் 500 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், குற்றங்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பல்சர் ரக மோட்டார் சைக்கிள் மற்றும் இரத்தக் கறை படிந்த தலைக்கவசம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
குழந்தைகளை ஏந்திச் செல்லும் பெண்களை இலக்காகக் கொண்டு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும், அவிசாவளை, கிரிஉல்ல, தெஹிஓவிட்ட மற்றும் ஹோமாகம பகுதிகளில் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்பு இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் முன்னர் பனாகொட இராணுவ முகாமின் விளையாட்டுப் பிரிவில் பணியாற்றிய அதிகாரி எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர் ஹோமாகம பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்த பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஹோமாகம தலைமையக பொலிஸ் நிலைய குற்றப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





