2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில், கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 258 தீ விபத்துகள் பதிவாகியுள்ளதாக தீயணைப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த தீ விபத்துகளுடன் தொடர்புடைய 17 மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டில் கொழும்பு மாவட்டத்தில் 382 தீ விபத்துகளும், 46 மீட்புச் சம்பவங்களும் பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களிலேயே 258 தீ விபத்துகள் பதிவாகியுள்ளமை கவலைக்குரிய விடயமாக இருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், இந்த ஆண்டில் இதுவரை தீயணைப்பு சேவைத் திணைக்களத்திற்கு 13 அவசர அழைப்புகள் கிடைத்துள்ளன. அவற்றில் பாதை தடைகள், மரங்கள் முறிந்து விழுதல் மற்றும் வீதி விபத்துகளால் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளும் அடங்குகின்றன.
பல்வேறு பணியிடங்களில் போதிய தீ பாதுகாப்பு வசதிகள் இல்லாமை, அவசரகால பதிலளிப்பு திட்டங்களுடன் இணைக்கப்படாமை, வீடுகள் மற்றும் பணியிடங்களில் பாதுகாப்பற்ற மின்சாரப் பயன்பாடு, அத்துடன் நிலவும் வறண்ட வானிலை ஆகியவை தீ விபத்துகளுக்கான முக்கிய காரணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தீயணைப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.





