அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டிருந்த அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கீரி பொன்னி அரிசியை விற்பனை செய்த காலி, அக்மீமன பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றுக்கு ரூ.5 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட கீரி பொன்னி அரிசியின் ஒரு கிலோகிராமுக்கான அதிகபட்ச சில்லறை விலை ரூ.255 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த வர்த்தக நிலையம் அதனை ரூ.270க்கு விற்பனை செய்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் காலி மாவட்ட புலனாய்வு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட வர்த்தக நிலையத்திற்கு எதிராக காலி நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கடந்த ஜூலை 17ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது இந்த சட்டவிரோத விற்பனை கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வழக்கு விசாரணையின்போது குறித்த நிறுவனம் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, ஜூலை 23ஆம் திகதி காலி நீதவான் நீதிமன்றம் அந்த நிறுவனத்திற்கு ரூ.500,000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.





