இலங்கையில் அதிகரித்து வரும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு உதவியாக, இந்தியா 500 லிட்டர் தொழில்நுட்ப தரமான மலத்தியோன் (Technical Malathion) பூச்சிக்கொல்லி மருந்தை நன்கொடையாக வழங்கியுள்ளது.
இந்த நன்கொடையை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் இன்று (04) உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
இந்திய நிறுவனமான UPL Limited வழங்கிய இந்த மருந்து, இலங்கை கோரிக்கை விடுத்த இரண்டு வாரங்களுக்குள் கொழும்பை வந்தடைந்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் இந்த ஆண்டு இதுவரை சுமார் 86,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், இந்த மலத்தியோன் மருந்து கொசு ஒழிப்பு புகைமூட்டல் மற்றும் தெளிப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தேவைகளுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்க இந்தியா உறுதிபூண்டுள்ளதாகவும், இரு நாடுகளுக்கிடையிலான நெருக்கமான ஒத்துழைப்பின் மற்றுமொரு எடுத்துக்காட்டாக இந்த நன்கொடை அமைந்துள்ளதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.





