சவூதி அரேபியாவில் மதத்தை அவமதித்ததாகக் கருதப்பட்ட சமூக ஊடகப் பதிவொன்றின் காரணமாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞரின் குடும்பம், அவரை விடுவிக்க சர்வதேச உதவியை கோரி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் முறையிட்டுள்ளது.
கல்முனை நட்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் என்பவர், இஸ்லாம் மதத்தையும் நபிகள் நாயகத்தையும் அவமதிக்கும் வகையில் Facebook-இல் பதிவு வெளியிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, சவூதி அரேபியாவின் அல்-அஹ்ஸா குற்றவியல் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார்.
சவூதியில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் சட்ட ஆலோசனையின் அடிப்படையில், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தாலும் தண்டனை குறைவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருப்பதாக இலங்கை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் தூதரகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், மேல்முறையீட்டிற்கான சட்டத்தரணி கட்டணமாக 20,000 சவூதி ரியாலும், மேல்முறையீட்டு மனுவைத் தயாரித்து தாக்கல் செய்வதற்கு 5,000 சவூதி ரியாலும் செலவாகும் என்றும், அந்தச் செலவுகளை குற்றவாளியே ஏற்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பத்தின் பிரதான வருமானம் ஈட்டுபவர் அனோஜன் என்பதால், அபராதத் தொகையையோ சட்டச் செலவுகளையோ ஏற்க முடியாத பொருளாதார நிலையில் இருப்பதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
மனிதாபிமான அடிப்படையில் அவரது தண்டனையைக் குறைத்து, இலங்கைக்கு திரும்ப உதவுவதுடன், மேல்முறையீட்டிற்குத் தேவையான சட்ட உதவியையும் வழங்குமாறு அவர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.





