சிறைச்சாலைகளில் அமைதியின்மையை ஏற்படுத்துவோரின் தூண்டுதல்களுக்கு கைதிகள் இடமளிக்க வேண்டாம் – நீதி அமைச்சர்

சிறைச்சாலைகளுக்குள் அமைதியின்மையை ஏற்படுத்தும் நோக்கில் சிலர் மேற்கொள்ளும் தூண்டுதல்களுக்கு கைதிகள் இடமளிக்க வேண்டாம் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வலியுறுத்தியுள்ளார்.

பல சிறைச்சாலைகளில் அண்மையில் பதிவான அமைதியின்மை சம்பவங்கள் தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அமைச்சர், கைதிகள் முன்வைத்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக தடயவியல் அறிக்கைகள் தாமதமடைவதால் பிணை பெறுவதில் ஏற்படும் தாமதங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு சுமார் 70 புதிய பணியாளர்களை நியமிப்பதுடன், புதிய உபகரணங்களும் இந்த மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் எதிர்காலத்தில் மாதாந்தம் சுமார் 7,500 முதல் 9,000 தடயவியல் அறிக்கைகளை வெளியிடும் திறனை திணைக்களம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், குறிப்பிட்ட போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான பிணைச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவைக்கு முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது 10 கிராமுக்கு அதிகமான போதைப்பொருள் கைப்பற்றப்படும் வழக்குகளில் சந்தேகநபர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பிணை கோர வேண்டிய நிலை காணப்படுவதால் ஏற்படும் தாமதத்தை குறைக்கும் வகையில், எதிர்காலத்தில் உயர்நீதிமன்றத்தில் பிணை கோருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலைக் குறைத்தல், வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் தடயவியல் அறிக்கைகளுக்காகக் காத்திருக்கும் விளக்கமறியல் கைதிகள் எதிர்கொள்ளும் தாமதங்களை நிவர்த்தி செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலுக்கு போதிய வசதிகள் இல்லாமையே பிரதான காரணம் என சுட்டிக்காட்டிய அமைச்சர், கைதிகளின் நிலைமைகளை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் உறுதியளித்துள்ளார்.

அதேவேளை, சிறைச்சாலை சொத்துக்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட வன்முறை நடவடிக்கைகள் கைதிகளுக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரித்த அமைச்சர், தனிப்பட்ட நலன்களை முன்னிறுத்தும் சிலரின் தூண்டுதல்களுக்கு கைதிகள் இரையாக வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

“சிறைச்சாலைகளுக்குள் அமைதியின்மையில் ஈடுபட்டு உங்களுடைய சொந்த வளங்களை அழிக்க வேண்டாம். அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளியுங்கள்” என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore