சம்மாந்துறை, ஜமாலியா பாடசாலை வீதிக்கு அருகில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த 37 வயதுடைய நபர் ஒருவர் இன்று அதிகாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்மாந்துறை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், இன்று அதிகாலை சுமார் 2.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே இந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, விற்பனைக்காக வைத்திருக்கப்பட்ட 5 கேன்கள் கொள்ளளவு கொண்ட 25 கசிப்பு போத்தல்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல அவர்களின் மேற்பார்வையில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சி அவர்களின் ஆலோசனையிலும், கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசார் அவர்களின் நெறிப்படுத்தலிலும் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மேலும், சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமார அவர்களின் நேரடி வழிகாட்டலில், சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி என். ரிபாய்டீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இந்தச் சுற்றிவளைப்பையும் கைது நடவடிக்கையையும் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மீதான மேலதிக விசாரணைகளையும் சட்ட நடவடிக்கைகளையும் சம்மாந்துறை பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.





