சந்திக ஹதுருசிங்கவுக்கு 164,000 அமெரிக்க டொலர் இழப்பீடு – சட்டப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவந்த SLC

முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹதுருசிங்கவுக்கு 164,000 அமெரிக்க டொலர்கள் (சுமார் ரூ.55 மில்லியன்) தொகையை இழப்பீடாக வழங்கி, அவருடனான நீண்டகால சட்டப் பிரச்சினையை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் (SLC) முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.

ஒப்பந்தம் நிறுத்தப்பட்டமை தொடர்பில் ஹதுருசிங்கவினால் சுவிட்சர்லாந்தில் உள்ள விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் (CAS) முன்னெடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளை, இந்த உடன்பாட்டின் அடிப்படையில் அவர் வாபஸ் பெறுவதற்கு இணங்கியுள்ளதாக Sunday Times செய்தி வெளியிட்டுள்ளது.

ஆரம்பத்தில் சுமார் 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பீடாக கோரியிருந்த ஹதுருசிங்க, பின்னர் சுமார் 450,000 அமெரிக்க டொலர்களை கோரி புதிய சட்ட நடவடிக்கையை முன்னெடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் எட்டப்பட்ட சமரச உடன்பாட்டின் கீழ், 200,000 அமெரிக்க டொலர்களை, அதில் 50% வரிப் பொறுப்பும் உள்ளடங்கும் வகையில் ஏற்றுக்கொள்ள ஹதுருசிங்க இணங்கியிருந்ததாகவும், வழக்கை முடிவுக்குக் கொண்டுவர SLC 164,000 அமெரிக்க டொலர்களை செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2017 டிசம்பர் முதல் இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக பணியாற்றிய ஹதுருசிங்கவின் காலப்பகுதியில், இலங்கை அணி விளையாடிய 67 சர்வதேச போட்டிகளில் 24 வெற்றிகளையும் 38 தோல்விகளையும் பதிவு செய்ததாக Sunday Times தெரிவித்துள்ளது.

அவரது பதவிக்காலத்தில் ஒழுக்கம் தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகளும் எழுந்திருந்தன. ஒருநபர் விசாரணையில், அணிக்குள் முரண்பாடுகளை ஏற்படுத்தியமை மற்றும் வீரர்களை போதியளவில் தயார்படுத்தத் தவறியமை உள்ளிட்ட ஆறு குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டப் பிரச்சினை காரணமாக கணிசமான சட்டச் செலவுகள் ஏற்பட்டிருந்ததுடன், இந்த விவகாரம் பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவான COPE மூலமும் பரிசீலிக்கப்பட்டது.

மேலும், எதிர்கால சட்டச் செலவுகளைத் தவிர்க்க இரு தரப்பினரும் நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் செய்து கொள்வது சிறந்தது என COPE பரிந்துரைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore