முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மறைந்த லக்ஷ்மன் கதிர்காமரின் 21ஆவது நினைவு தினம் இன்று (12) மத நிகழ்வொன்றுடன் அனுஷ்டிக்கப்பட்டது.
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு மற்றும் லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாயக் கற்கைகள் நிறுவனம் (LKIIRSS) இணைந்து இந்த மத நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
கொழும்பு ஸ்ரீ சம்போதி விகாரையின் வணக்கத்திற்குரிய கண்டி அமித கவசி தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தின் ஏழு உறுப்பினர்களின் தலைமையில் பிக்குகளுக்கு தானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது உரையாற்றிய வணக்கத்திற்குரிய அமித கவசி தேரர், மறைந்த லக்ஷ்மன் கதிர்காமர் இராஜதந்திரத் துறைக்கு ஆற்றிய சிறப்பான பங்களிப்பு, தேசிய ஒற்றுமைக்காக அவர் மேற்கொண்ட பணிகள் மற்றும் நாட்டிற்கான அவரது அர்ப்பணிப்பு ஆகியவற்றை நினைவுகூர்ந்தார்.
தொடர்ந்து நாட்டின் எதிர்காலத்திற்கும் LKIIRSS நிறுவனத்தின் பணிகளுக்கும் ஆசீர்வாதம் வேண்டி பிரித் பாராயணம் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், மறைந்த லக்ஷ்மன் கதிர்காமரின் மனைவியும் LKIIRSS ஆளுநர் சபையின் வாழ்நாள் உறுப்பினருமான சுகந்தி கதிர்காமர், LKIIRSS இன் பதில் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷார ரொட்ரிகோ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும், நிறுவனத்தின் ஆளுநர் சபை உறுப்பினர்கள், வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரிகள் மற்றும் LKIIRSS ஊழியர்களும் நிகழ்வில் பங்கேற்றனர்.





