இலங்கையில் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரத்திற்கான விசேட அறிக்கையாளர் Margaret Satterthwaite கவலை வெளியிட்டுள்ளார்.
ஆகஸ்ட் 7ஆம் திகதி இலங்கை அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டுள்ள தொடர்பாடலில், முன்மொழியப்பட்டுள்ள திருத்தம் சர்வதேச மனித உரிமைத் தரநிலைகள் மற்றும் நீதித்துறையின் சுதந்திரம், நியாயமான விசாரணைக்கான உரிமை ஆகியவற்றுடன் முரண்படக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்மொழிவின் கீழ், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கட்டாய ஓய்வு வயது 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 63 இலிருந்து 65 ஆகவும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்த மாற்றம் எதிர்காலத்தில் நியமிக்கப்படும் நீதிபதிகளுக்கு மாத்திரமன்றி, தற்போது பதவியில் உள்ள நீதிபதிகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்படுவது குறித்து ஐ.நா. விசேட அறிக்கையாளர் கவலை வெளியிட்டுள்ளார்.
நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பது நீதித்துறை அனுபவத்தைப் பாதுகாப்பது மற்றும் நிறுவனத் தொடர்ச்சியை உறுதி செய்வது போன்ற காரணங்களுக்காக நியாயப்படுத்தப்படலாம் என ஏற்றுக்கொண்டுள்ள அவர், நீதிபதிகளின் பதவிக்காலத்தை பாதிக்கும் எந்தவொரு சீர்திருத்தமும் விரிவான விவாதம், ஆலோசனை மற்றும் வலுவான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், குறிப்பிட்ட நீதிபதிகளின் பெயர்கள் முன்மொழிவில் குறிப்பிடப்படவில்லை என்றாலும், நடைமுறையில் சில உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிக்கும் விளைவை இந்தத் திருத்தம் ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாற்றத்திற்கான இடைக்கால ஏற்பாடுகள் அல்லது பிற புறநிலையான பாதுகாப்பு நடைமுறைகள் இல்லாதிருப்பது, நீதித்துறையின் அமைப்பை உடனடியாக மாற்றுவதற்கான நோக்கத்துடன் இந்தத் திருத்தம் கொண்டுவரப்படுவதாக பொதுமக்களிடையே கருத்து உருவாக வழிவகுக்கலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஓய்வு வயது நீட்டிப்பின் மூலம் பயனடையக்கூடிய நீதிபதிகளே பின்னர் அந்த அரசியலமைப்புத் திருத்தத்தின் அரசியலமைப்புச் சட்டபூர்வத்தன்மையை தீர்மானிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், நலன் முரண்பாடு தொடர்பான கவலைகளும் உருவாகக்கூடும் என ஐ.நா. விசேட அறிக்கையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, நீதிபதிகளின் ஓய்வு வயதில் மாற்றம் மேற்கொள்ளப்படுமானால், அது வெளிப்படையான, உள்ளடக்கிய, பாரபட்சமற்ற மற்றும் விரிவான ஆலோசனை அடிப்படையிலான நீதித்துறை சீர்திருத்த நடவடிக்கையின் ஊடாக முன்னெடுக்கப்பட வேண்டும் என அவர் பரிந்துரைத்துள்ளார்.
மேலும், தற்போதைய நீதிபதிகளுக்கு இந்த மாற்றத்தைப் பொருந்தச் செய்வதற்கான காரணம், அரசியல் தலையீடுகளிலிருந்து நீதித்துறையைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் மற்றும் நீதித்துறை, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL), சட்டத்துறை நிபுணர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் கல்வியாளர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகள் தொடர்பான தகவல்களை இலங்கை அரசாங்கத்திடம் ஐ.நா. கோரியுள்ளது.





