ஈஸ்டர் தாக்குதல்: முன்னாள் பொலிஸ் மா அதிபரை மீண்டும் சர்ச்சைக்குள்ளாக்கிய ‘FNA’ நடைமுறை

முக்கியமான அதிகாரபூர்வ தகவல்களை “FNA – For Necessary Action” (தேவையான நடவடிக்கைக்காக) எனக் குறிப்பிட்டு மேலதிக அதிகாரிகளுக்கு அனுப்பிவைக்கும் நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி திலீப பீரிஸ் தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னர் கிடைத்த புலனாய்வுத் தகவல்கள் கையாளப்பட்ட விதத்தை சுட்டிக்காட்டிய அவர், முக்கியமான பாதுகாப்புத் தகவல்களை வெறுமனே அடுத்தடுத்த அதிகாரிகளுக்கு அனுப்பிவைப்பதை விட, அதற்கு பொறுப்பான அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

2019 ஏப்ரல் 9 ஆம் திகதி அப்போதைய அரச புலனாய்வுச் சேவை பிரதானியால் வழங்கப்பட்ட தகவல், அப்போதைய பொலிஸ் மா அதிபர் புஜித் ஜயசுந்தரவினால் நான்கு பிரிவுகளுக்கு அனுப்பப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். அதில் முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரிவும் உள்ளடங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

அந்த தகவல் “FNA” என்ற குறிப்புடன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், பாரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பான புலனாய்வுத் தகவல்களுக்கு இவ்வாறான நடைமுறை போதுமானதா என திலீப பீரிஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், முன்கூட்டியே கிடைத்த புலனாய்வுத் தகவல்களைப் பெற்றிருந்த போதிலும் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதாகக் கூறி, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் புஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம் பின்னர் 855 குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்ததையும் அவர் நினைவுபடுத்தினார்.

முக்கியமான தகவல்களை வெறுமனே “FNA” எனக் குறிப்பிட்டு அடுத்த அதிகாரிக்கு அனுப்பிவைப்பது மாத்திரம் போதுமானதல்ல என்றும், தகவலைப் பெறும் அதிகாரிகள் அதற்கான பொறுப்பை ஏற்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore