இலகுரக இந்திய மோட்டார் சைக்கிள்களை அதிக வேகத்தில் செலுத்துவதால் விபத்துகள் அதிகரித்து வருவதாகவும், இளைஞர்கள் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் W.P.J. சேனாதீர இதனைத் தெரிவித்துள்ளார்.
வேலைக்குச் செல்வது, நகரங்களுக்கு பயணிப்பது, பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்துச் செல்வது உள்ளிட்ட அன்றாட போக்குவரத்து தேவைகளை கருத்திற்கொண்டு குறைந்த செலவில் பயன்படுத்தக்கூடிய வகையில் இந்த இலகுரக மோட்டார் சைக்கிள்கள் அறிமுகப்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், 18 வயதுக்குக் குறைவானவர்கள் மற்றும் 18 வயதை அண்மித்த இளைஞர்கள் உள்ளிட்ட பலர் இந்த மோட்டார் சைக்கிள்களை அதிக வேகத்தில் செலுத்தி வருவதாக பொலிஸாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மோட்டார் சைக்கிள்கள் எடை குறைந்தவையாகவும் எரிபொருள் சிக்கனமானவையாகவும் இருந்தாலும், அதிக வேகத்தில் செல்லும்போது திடீரென பிரேக் பிடித்தால் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழக்கும் அல்லது சறுக்கும் அபாயம் அதிகம் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிவேகம் மற்றும் திடீர் பிரேக்கிங் காரணமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு, எதிரே வரும் வாகனங்களால் மோதப்பட்டு உயிரிழக்கும் சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இவ்வகை மோட்டார் சைக்கிள்கள் பந்தயப் பயணம் அல்லது ‘Wheeling’ போன்ற சாகசங்களுக்கு பயன்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்படவில்லை எனவும், இளைஞர்கள் பொறுப்புடன் வாகனங்களை செலுத்த வேண்டும் எனவும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.





