எல் நினோ (El Niño) தாக்கத்துடன் நிலவும் அதிக வெப்பமான காலநிலை, மனநலப் பிரச்சினைகள் அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கலாம் என காலி தேசிய வைத்தியசாலையின் ஆலோசனை மனநல வைத்தியர் டொக்டர் ருமி ரூபென் எச்சரித்துள்ளார்.
நீண்ட நேரம் கடும் வெயிலில் இருப்பதால் உடல் வெப்பநிலை அதிகரிப்பதுடன், அது மனநலத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
அதிக வெப்பநிலை காரணமாக கோபம் அதிகரித்தல், பொறுமை குறைதல் மற்றும் முரண்பாடான நடத்தைகள் அதிகரித்தல் போன்ற மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்றும், இவை தீவிரமான உளவியல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருப்பதுடன், வாகன சாரதிகளிடையே Road Rage எனப்படும் சாலை ஆத்திரமும், குடும்பங்களில் குடும்ப வன்முறையும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் வைத்தியர் எச்சரித்துள்ளார்.
ஏற்கனவே மனநலப் பிரச்சினைகளுக்காக சிகிச்சை பெற்று வரும் நபர்களின் நிலையும் அதிக வெப்பமான காலநிலையால் மேலும் மோசமடையக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தவிர்க்க பொதுமக்கள் நேரடி சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருப்பதைத் தவிர்த்து, போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும் டொக்டர் ருமி ரூபென் அறிவுறுத்தியுள்ளார்.
(Newswire)





