இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை 91,346 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 68 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, டெங்கு நோயின் உயிரிழப்பு விகிதம் 0.07% ஆக பதிவாகியுள்ளது.
மாதாந்த அடிப்படையில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் ஜூலை மாதத்தில் 29,968 பேர் பதிவாகியுள்ளனர். ஜூன் மாதத்தில் 21,533 பேரும், ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை 6,004 பேரும் பதிவாகியுள்ளனர்.
மாவட்ட அடிப்படையில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகிய மாவட்டமாக கம்பஹா முன்னிலையில் உள்ளது. அங்கு 19,467 பேர், அதாவது மொத்த நோயாளர்களில் 21.3% பதிவாகியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து:
🔹 கொழும்பு – 18,133 பேர் (19.8%)
🔹 களுத்துறை – 6,626 பேர்
🔹 கண்டி – 5,021 பேர்
🔹 காலி – 3,678 பேர்
மாகாண அடிப்படையில், மேல் மாகாணத்தில் மட்டும் 48,338 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இது நாட்டின் மொத்த நோயாளர்களில் 53%க்கும் அதிகமாகும்.
மேலும், தென் மாகாணத்தில் 11,679 பேரும், மத்திய மாகாணத்தில் 8,546 பேரும் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
31ஆவது வாரத்தில் நாடளாவிய ரீதியில் 119 MOH சுகாதாரப் பிரிவுகள் அதிக ஆபத்தான பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு சராசரியாக 1,509 புதிய டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பொதுமக்கள் தமது சுற்றுப்புறங்களில் நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை அகற்றுவதுடன், டெங்கு அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.





