கல்முனை வைத்தியசாலை உள்ளிட்ட நாட்டின் பல வைத்தியசாலைகளில் பணியாற்றும் முஸ்லிம் பெண் தாதிய உத்தியோகத்தர்களின் உத்தியோகபூர்வ சீருடை தொடர்பான பிரச்சினைக்கு உடனடி மற்றும் நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று பாராளுமன்ற வளாகத்தில் சுகாதார அமைச்சரின் தலைமையில் இடம்பெற்றுள்ளது. இதில் முஸ்லிம் மற்றும் தமிழ் அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
சமீப நாட்களில் கவனம் பெற்றுள்ள இந்த நுட்பமான விவகாரம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், வைத்தியசாலைகளின் சுமுகமான செயற்பாடுகளை உறுதி செய்வதோடு, சம்பந்தப்பட்ட தாதிய உத்தியோகத்தர்களின் உரிமைகளைப் பாதுகாத்து, அனைத்து தரப்பினருக்கும் இடையிலான ஒற்றுமையையும் பேணும் வகையில் அமைதியானதும் நடைமுறைக்கு ஏற்றதுமான தீர்வு அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, தற்போது நிலவும் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக உடனடி குறுகியகால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
அதேவேளை, எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் மீண்டும் ஏற்படாத வகையில் நிரந்தரமான நீண்டகால தீர்வு ஒன்றை விரைவாக அடையாளம் கண்டு நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
(Newswire)





