மேற்கு கடற்பரப்பில் ஏற்பட்ட கடற்படை படகு விபத்தின் போது 11 கடற்படை வீரர்களை மீட்க உதவிய அங்குலானையைச் சேர்ந்த 14 பொதுமக்களை இலங்கை கடற்படை கௌரவித்துள்ளது.
ஆகஸ்ட் 15ஆம் திகதி P 4447 என்ற அதிவேக தாக்குதல் படகு (Fast Attack Craft) கடலில் ஆபத்தான நிலைக்குள்ளானதைத் தொடர்ந்து, கடுமையான கடல் நிலைமைகளுக்கு மத்தியிலும் குறித்த பொதுமக்கள் தங்களது உயிரைப் பணயம் வைத்து கடற்படை வீரர்களுக்கு உதவியுள்ளனர்.
அவர்களின் துரிதமான நடவடிக்கையைப் பாராட்டி, மேற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் ஆகஸ்ட் 18ஆம் திகதி பாராட்டு கடிதங்கள் வழங்கப்பட்டன.
இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ குறித்த 14 பொதுமக்களுக்கும் பாராட்டு கடிதங்களை வழங்கினார்.
இந்த அவசரநிலையின்போது அவர்கள் வெளிப்படுத்திய குடிமைப் பொறுப்புணர்வு மற்றும் மனிதாபிமான உதவிக்கு கடற்படையின் நன்றியைத் தெரிவித்த கடற்படைத் தளபதி, அவர்களின் உடனடி நடவடிக்கை மீட்பு நடவடிக்கை வெற்றியடைய முக்கிய பங்களிப்பை வழங்கியதாக குறிப்பிட்டார்.
மேற்கு கடற்படைப் பிராந்தியத் தளபதி ரியர் அட்மிரல் ஜகத் குமார உள்ளிட்ட மூத்த மற்றும் இளைய கடற்படை அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
(Newswire)





