அமெரிக்கப் படைகளுக்கு இராணுவ உதவி அல்லது வசதிகளை வழங்கும் வளைகுடா நாடுகள், போரில் அமெரிக்காவுடன் இணைந்து பங்கேற்பதாகக் கருதப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானிய ஆயுதப் படைகளின் தலைமைப் பணியாளர் மேஜர் ஜெனரல் அலி அப்தொல்லாஹி, பாரசீக வளைகுடாவின் தெற்குக் கரையோர நாடுகளுக்கு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அமெரிக்கா தனது பிரதேசத்தை ஈரானுக்கு எதிராக பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம் என சில நாடுகள் அறிவித்துள்ள போதிலும், பிராந்தியத்தில் நடைபெறும் இராணுவ நடவடிக்கைகளை ஈரான் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, பிராந்திய இராணுவத் தளங்களில் அதிக எண்ணிக்கையிலான அமெரிக்க இராணுவ விமானங்கள், குறிப்பாக எரிபொருள் நிரப்பும் விமானங்கள் இருப்பது, அந்த நாடுகளின் அறிவின்றி நடைபெற வாய்ப்பில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கப் படைகளுக்கு வழங்கப்படும் எந்தவொரு உதவி அல்லது வசதியும் அமெரிக்க இராணுவத்துடன் இணைந்து போரில் பங்கேற்பதற்கு சமமானது என ஈரான் எச்சரித்துள்ளது.





