பிரித்தானியாவில் வசித்து வந்ததாக BBC விசாரணையில் கண்டறியப்பட்ட, முன்னர் பிரான்ஸில் மனிதக் கடத்தல் குற்றத்திற்காக சிறைத்தண்டனை பெற்ற ஈராக் நாட்டவரான Twana Jamal Khdir கைது செய்யப்பட்டு குடியேற்றக் குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
36 வயதில் பிரான்ஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவர், ஆங்கிலக் கால்வாய் வழியாக சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கடத்தியதன் மூலம் வாரத்திற்கு £100,000 வரை சம்பாதித்ததாக அந்நாட்டு வழக்கறிஞர்கள் தெரிவித்திருந்தனர். 2016ஆம் ஆண்டு அவருக்கு பிரான்ஸில் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த மாதம் BBC நடத்திய விசாரணையில் அவர் தற்போது பிரித்தானியாவின் Leicestershire பகுதியில் வசித்து வருவது தெரியவந்தது.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை Uppingham அருகே Midlands Criminal Financial Investigations குழு தலைமையிலான நடவடிக்கையில், Leicestershire காவல்துறையின் ஆதரவுடன் அவர் கைது செய்யப்பட்டார்.
Leicester Magistrates’ Court-ல் ஆஜர்படுத்தப்பட்ட அவர், செல்லுபடியாகும் நுழைவு அனுமதியின்றி பிரித்தானியாவுக்குள் நுழைந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். ஆனால் மோசடியான முறையில் நாட்டில் தங்குவதற்கான அனுமதியைப் பெற முயன்றதாக முன்வைக்கப்பட்ட மற்றொரு குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
அவர் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், அடுத்ததாக ஒக்டோபர் 5ஆம் திகதி Leicester Crown Court-ல் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
BBC





