களனி கங்கையிலிருந்து நீரைப் பெற்றுக்கொள்ளும் பகுதியில் நீரின் தரத்தைப் பாதித்த அவசர நிலைமை, முப்படையினரின் ஒத்துழைப்புடன் தற்போது சீர்செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, நீரின் தரம் தொடர்பான ஆய்வகப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அது உரிய தரநிலைகளுக்கு அமைவாக இருப்பது உறுதி செய்யப்பட்ட பின்னர் நீர் விநியோகத்தை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீர் சுத்திகரிப்பு நிலையங்களைச் சார்ந்த பகுதிகளில் அடுத்த சில மணிநேரங்களுக்குள் நீர் விநியோகம் வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், பத்தரமுல்ல, கோட்டே, பாமன்கடை மற்றும் நுகேகொடை உள்ளிட்ட பகுதிகளில் நீர் விநியோகம் முழுமையாக வழமைக்குத் திரும்புவதில் சிறிது தாமதம் ஏற்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.





