ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் வைத்திருந்ததாகக் கூறப்படும் அனைத்து கண்ணிவெடிகளும் அமெரிக்க கடற்படையினரால் அகற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், மீண்டும் கண்ணிவெடிகளை அமைக்க முயற்சிக்கும் கப்பல்கள் உடனடியாக அழிக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்ததைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிராக அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ஈரானுடன் நிதித் தொடர்புகளைப் பேணும் நாடுகளும் தனிமைப்படுத்தப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா, ஈரானிடம் இருந்து எண்ணெய் கொள்வனவு செய்து வரும் நிலையில், அமெரிக்காவின் ஒருதலைப்பட்சமான பொருளாதாரத் தடைகளுக்கு எதிராக தனது உரிமைகளைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஹோர்முஸ் நீரிணையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க ஈரான் விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது. ஓமன் நாட்டின் மத்தியஸ்தத்துடன் தற்காலிக கடல்வழிப் பாதையொன்றை அமைப்பது தொடர்பிலும் ஈரான் ஆலோசித்து வருகிறது.
ஈரான் தரப்பில், வர்த்தகக் கப்பல்கள் தமது எல்லைக்குட்பட்ட நீர்வழிப் பாதையிலேயே பயணிக்க வேண்டும் என்றும், இராணுவக் கப்பல்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் முழுமையாக மூட நேரிடும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.





