அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், உலகெங்கிலும் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களில் விசா விண்ணப்பதாரர்களுக்கான நேர்முகத் தேர்வு சந்திப்புகளை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தகவலின்படி, உலகளாவிய ரீதியில் தூதரக அதிகாரிகளுக்கான புதிய பயிற்சி நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இந்தப் பயிற்சிகளுக்கு ஏற்ப விசா சேவைகளுக்கான நேர்முகத் தேர்வு நேரங்கள் மாற்றியமைக்கப்படவுள்ளன.
இந்தப் பயிற்சியின் மூலம் அமெரிக்க அரசின் பொது நல உதவிகளில் அதிகளவில் சார்ந்திருக்கக்கூடிய விண்ணப்பதாரர்களை அடையாளம் காண்பதுடன், விசா விண்ணப்பங்களை விரிவாகவும் ஒரே மாதிரியான நடைமுறையிலும் மதிப்பீடு செய்வதே நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த சில குடியேற்ற விசா நேர்முகத் தேர்வுகள் மாற்றியமைக்கப்படுவதாக விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புதிய நேர்முகத் தேர்வு திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ட்ரம்ப் நிர்வாகத்தின் குடியேற்றக் கட்டுப்பாடுகள் தொடர்பில் மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்தும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. விசா மற்றும் குடியேற்ற நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய நடவடிக்கை உலகளாவிய ரீதியில் அமெரிக்க விசா விண்ணப்பதாரர்களிடையே கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.





