கெப்பித்திகொல்லாவ பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் இன்று (27) முற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் 10 நாட்களேயான கைக்குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
பதவிய – சிறிபுர பகுதியில் இருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியும், அநுராதபுரத்திலிருந்து கெப்பித்திகொல்லாவ நோக்கிப் பயணித்த கெப் வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி, அவரது தாய் மற்றும் 10 நாட்களேயான கைக்குழந்தை ஆகியோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்குச் சென்று கொண்டிருந்தபோதே இந்த துயரச் சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கெப்பித்திகொல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





