உக்ரைன் தலைநகர் கிவ் அருகே அமைந்திருந்த இராணுவ ஆயுதக் களஞ்சியமொன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 37 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் இந்த தாக்குதலைத் தொடர்ந்து, ஆயுதக் களஞ்சியத்தில் இருந்த வெடிபொருட்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் வெடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் அருகிலிருந்த குடியிருப்புகள் மற்றும் கட்டடங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான காப்பகமொன்றும் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதலின் பின்னர் சுமார் 400 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், 42 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் நான்கு குழந்தைகள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தினால் குறித்த பகுதியில் சுமார் 130 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆயுதக் களஞ்சியம் மக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் அமைந்திருந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கிவ் நகரைச் சுற்றியுள்ள ஆயுதக் களஞ்சியங்களை இலக்கு வைத்து அண்மைய மாதங்களில் இடம்பெற்றுள்ள தாக்குதல்களில் இது மற்றுமொரு சம்பவமாகும்.





