பால்மா, பால் மற்றும் யோகட் உள்ளிட்ட சில பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
விலை அதிகரிப்பு தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
எனினும், குறித்த பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள விலை மாற்றங்கள் தொடர்பான தகவல்களுக்கு எந்தவிதமான உறுதிப்படுத்தலும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறுதிப்படுத்தப்படாத செய்திகளை பொதுமக்கள் பகிர்வதைத் தவிர்க்குமாறும் நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.
போலியான தகவல்கள் பரவுவதன் மூலம் நுகர்வோர் மத்தியில் தேவையற்ற அச்சம் ஏற்படுவதுடன், சந்தை தொடர்பிலும் குழப்பமான நிலை உருவாகக்கூடும் என அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, பொருட்களின் விலை மாற்றம் அல்லது சந்தை முறைகேடுகள் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டால், 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு தகவல் வழங்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.





