அவுஸ்திரேலியாவின் தெற்கு கடற்பகுதியில் ஆண்டுதோறும் இடம்பெறும் உலகின் மிகப்பெரிய ராட்சத கடற்கணவாய்களின் இனப்பெருக்கக் கூட்டம் இவ்வாண்டு வரலாறு காணாத அளவுக்கு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் 1,811 ராட்சத கடற்கணவாய்கள் மட்டுமே இனப்பெருக்கத்திற்காக அப்பகுதிக்கு வந்துள்ளன. கடந்த ஆண்டு சுமார் 63,000 கடற்கணவாய்கள் பதிவாகியிருந்த நிலையில், இது சுமார் 97% வீழ்ச்சியாகும்.
இவ்வீழ்ச்சிக்கு தெற்கு அவுஸ்திரேலிய கடற்பகுதியில் நீண்டகாலமாக நிலவி வரும் நச்சுத்தன்மை கொண்ட பாசிப் பெருக்கம் (Toxic Algal Bloom) முக்கிய காரணமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இனப்பெருக்கத்திற்குப் பின்னர் வயது வந்த கடற்கணவாய்கள் பொதுவாக உயிரிழப்பதால், ஒவ்வொரு இனப்பெருக்கப் பருவமும் அடுத்த தலைமுறையின் எண்ணிக்கைக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.
இந்த ஆண்டு கடற்கரையோரப் பகுதிகளில் சுமார் 440 முட்டைகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வழக்கமாக இப்பகுதியில் மில்லியன் கணக்கான முட்டைகள் காணப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
கடற்கணவாய்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான வீழ்ச்சி தொடர்பில் மேலதிக ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றை அச்சுறுத்தப்பட்ட உயிரினமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.
எவ்வாறாயினும், சுற்றுச்சூழல் நிலைமைகள் சாதகமாக மாறினால் கடந்த காலங்களில் போன்று இந்த உயிரினங்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.





