இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல் தொடர்பில் புதிய கவலைகள் எழுந்துள்ளன. முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்ட சில கைதிகள், விடுதலை நிபந்தனைகளை மீறியதற்காகவும் புதிய குற்றங்களில் ஈடுபட்டதாகவும் மீண்டும் சிறைக்கு அழைக்கப்படும் நிலை அதிகரித்துள்ளதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2024ஆம் ஆண்டு சிறைச்சாலைகளில் ஏற்பட்ட அதிக நெரிசலைக் குறைக்கும் நோக்கில் ஆயிரக்கணக்கான கைதிகள் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டனர். இந்த திட்டத்தின் கீழ் 70,000க்கும் அதிகமானோர் மார்ச் 2026 வரையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், 2026 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த ஆண்டில் விடுதலை நிபந்தனைகளை மீறியதாக அல்லது புதிய ஆபத்து ஏற்பட்டதாக கருதி கைதிகளை மீண்டும் சிறைக்கு அழைத்த சம்பவங்களின் எண்ணிக்கை 51,419 ஆக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 28% அதிகமாகும்.
சிறை நிர்வாகிகள், ஒரே கைதிகள் மீண்டும் மீண்டும் சிறைக்கு திரும்புவதால் சிறைகளில் நிலவும் இடப்பற்றாக்குறை மேலும் தீவிரமடைவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தற்போது 87,000க்கு அருகிலான கைதிகள் சிறைகளில் உள்ள நிலையில், சுமார் 2,000 இடங்கள் மட்டுமே மீதமுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறைச்சாலைகளில் இடப்பற்றாக்குறை காரணமாக சில தனிநபர் அறைகளில் இரு கைதிகளை தங்க வைக்கும் நிலையும் காணப்படுவதாகவும், இது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான கவலைகளை ஏற்படுத்துவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய முன்கூட்டிய விடுதலைத் திட்டத்தில் கொலை மற்றும் கொலைக்கு சமமான கடுமையான குற்றங்களில் தண்டிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட சில பிரிவினருக்கு விடுதலை வாய்ப்பு வழங்கப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
சிறைச்சாலைகளில் புதிய இடங்களை உருவாக்குதல், மின்னணு கண்காணிப்பு முறைகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் நெரிசலைக் குறைக்க அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





