அமெரிக்கா – ஈரான் மோதல்: கச்சா எண்ணெய் விலை 3%க்கும் மேல் உயர்வு

அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் இராணுவத் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ள நிலையில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை திங்கட்கிழமை (31) 3%க்கும் மேல் அதிகரித்துள்ளது.

அமெரிக்கா, ஹோர்முஸ் நீரிணையில் அமைந்துள்ள ஈரானின் லாரக் தீவில் இரண்டு ஏவுகணை ஏவுதளங்களை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும் வகையில், ஈரான் ஜோர்தானில் உள்ள இரண்டு அமெரிக்க விமானப்படைத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன் தாக்கமாக, திங்கட்கிழமை 11:20 GMT நிலவரப்படி பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 2.87 அமெரிக்க டொலர் அல்லது 3.26% அதிகரித்து 90.97 டொலராக உயர்ந்துள்ளது.

அதேவேளை, அமெரிக்க WTI கச்சா எண்ணெய் விலை 2.91 டொலர் அல்லது 3.49% அதிகரித்து 86.31 டொலராக பதிவாகியுள்ளது.

மத்திய கிழக்கில் மீண்டும் ஆரம்பித்துள்ள இராணுவ மோதல்கள் மற்றும் எதிர்காலத்தில் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்த அச்சம் காரணமாக எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் முக்கியமான பாதையாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணை வழியாக போருக்கு முன்னர் உலக எண்ணெய் விநியோகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீரிணை பகுதியில் கப்பல் போக்குவரத்து தொடர்பான அச்சம் அதிகரித்துள்ளதுடன், வார இறுதியில் அந்தப் பகுதியில் தினசரி காணப்பட்ட சரக்கு கப்பல்களின் எண்ணிக்கை ஐந்தாகக் குறைந்துள்ளதாக கப்பல் போக்குவரத்து தரவுகள் தெரிவிக்கின்றன.

எனினும், திங்கட்கிழமை ஏற்பட்ட உயர்வுக்குப் பின்னரும், கடந்த வாரம் 4%க்கும் அதிகமாக சரிந்திருந்த பிரெண்ட் மற்றும் WTI எண்ணெய் விலைகள் ஆகஸ்ட் மாதத்தில் சிறிய அளவிலான சரிவை பதிவு செய்யும் நிலையில் உள்ளன.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore