நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுகரமான திடீர் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,000-ஐ கடந்துள்ளதாக அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, மேலும் 3,900-க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் 600-க்கும் மேற்பட்டோர் திரிஷூலி ஆற்றை அண்மித்த நீர்மின் நிலையங்களின் சேற்றால் நிரம்பிய சுரங்கப் பாதைகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
சுரங்கங்களுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கையில் நேபாள மற்றும் சீன இராணுவத்தினர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இந்தியா, தென் கொரியா மற்றும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நிபுணர்களும் மீட்புப் பணிகளுக்கு ஆதரவளித்து வருகின்றனர்.
சில சுரங்கங்களுக்குள் ஆக்சிஜன் செலுத்தும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஒரு சுரங்கப் பாதைக்குள் மீட்புக் குழுவினர் நுழைய முடிந்தபோதிலும், அங்கு எவரையும் காண முடியாததால் அவர்கள் மீண்டும் வெளியேறியுள்ளனர்.
வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் குறைந்தது 11 நீர்மின் திட்டங்கள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் திட்டங்களில் உள்ளூர் தொழிலாளர்கள் முதல் பொறியாளர்கள் வரை நூற்றுக்கணக்கானோர் பணியாற்றி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்புப் பணிகள் தாமதமாகி வருவதாக காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர். இருப்பினும், சுரங்கங்களுக்குள் நிலவும் ஆக்சிஜன் வசதி மற்றும் நிலத்தடிப் பாதுகாப்பு காரணமாக சிலர் இன்னும் உயிருடன் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை மீட்கப்பட்ட சுமார் 900 உடல்களில் 4 சதவீதம் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாக நேபாள சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அடையாளம் காணப்படாத உடல்களை தற்காலிகமாக அடக்கம் செய்யும் நடவடிக்கைகளும் சில பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனிடையே, நேபாள பிரதமர் பலேந்திர ஷா, மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இமயமலைப் பகுதியில் காலநிலை மாற்றத்துடன் இயற்கை அனர்த்தங்களின் அபாயம் அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திபெத் பகுதியிலும் வெள்ளத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 546 பேர் காணாமல் போயுள்ளதாகவும் சீன அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட இந்த அனர்த்தம், பிராந்தியத்தில் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.





