போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு எந்தவிதமான சலுகையும் வழங்கப்படாது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைகளில் அவசர நிலைமைகள் ஏற்படும் போது விரைவாகச் செயற்படுவதற்கும், கைதிகளின் நலன்புரி நடவடிக்கைகளை மேலும் ஒழுங்குபடுத்துவதற்குமான ஒருங்கிணைந்த பொறிமுறை தொடர்பான கலந்துரையாடல் இன்று (01) மஹர சிறைச்சாலை வளாகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டபோதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை வெளியிடுவதில் காணப்பட்ட தாமதத்தை குறைப்பதற்காக பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதற்காக தேவையான ஆட்சேர்ப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதிகாரிகள் இரவு 10 மணி வரை பணியாற்றி நிலுவையில் உள்ள அறிக்கைகளை விரைவாக வெளியிட நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 9,081 அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தற்போது நிலுவையில் உள்ள அனைத்து அறிக்கைகளையும் வெளியிடுவதே இலக்காக உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், முன்னைய அரசாங்கங்களின் காலங்களுடன் ஒப்பிடுகையில், தற்போதைய அரசாங்கம் அதிகளவிலான போதைப்பொருட்களை கைப்பற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சிறையில் உள்ள அனைவரும் குற்றவாளிகள் அல்லர் எனவும், தவறுகள் காரணமாக சிறை சென்றவர்களுக்கு மீண்டும் சமூகத்தில் நல்ல முறையில் வாழ்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைகளில் எதிர்காலத்தில் அவசர நிலைமைகள் ஏற்பட்டால் அவற்றை திறம்பட கையாளும் நோக்கில், இதுவரை 15 சிறைச்சாலைகளில் ஒருங்கிணைந்த நடவடிக்கை பொறிமுறை நிறுவப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சிறைச்சாலைகளில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு முன்னரே அவற்றை அடையாளம் காணுதல், அவசர சூழ்நிலைகளில் பிரதேச மட்டத்தில் ஒருங்கிணைந்து செயற்படுதல் மற்றும் கைதிகளின் நலன்புரியை உறுதி செய்தல் ஆகியவை இந்தப் பொறிமுறையின் முக்கிய நோக்கங்களாகும்.
இதன்போது அண்மையில் மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தால் சேதமடைந்த பகுதிகளையும் அமைச்சர் பார்வையிட்டுள்ளார்.
மேலும், சிறையிலிருந்து விடுதலையான பின்னர் மீண்டும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடாமல் சமூகத்திற்கு பயனுள்ளவர்களாக வாழுமாறு கைதிகளிடம் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு எந்தவிதமான மன்னிப்பும் வழங்கப்படாது என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.





