இலங்கையின் அரசாங்கக் கடன் 97.95 பில்லியன் டொலராக அதிகரிப்பு

இலங்கையின் மொத்த அரசாங்கக் கடன் கடந்த ஜூன் 30ஆம் திகதி நிலவரப்படி 97.952 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக நிதி அமைச்சின் பொது கடன் முகாமைத்துவ அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன் ரூபாய் பெறுமதி சுமார் 32.977 டிரில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மத்திய அரசாங்கத்தின் கடன் மாத்திரம் 95.047 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்படுவதுடன், மாகாண சபைகள் மற்றும் மாகாண நிறுவனங்களின் கடன் சுமார் 20 மில்லியன் டொலர்களாகவும், அரசாங்க உத்தரவாதம் வழங்கப்பட்ட அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் கடன் 2.885 பில்லியன் டொலர்களாகவும் பதிவாகியுள்ளது.

உள்நாட்டுக் கடன் 57 பில்லியன் டொலர்

ஜூன் மாத இறுதியில் மத்திய அரசாங்கத்தின் உள்நாட்டுக் கடன் 57.039 பில்லியன் டொலர்களாக காணப்பட்டுள்ளது.

இதில் திறைசேரிப் பிணைமுறிகள் மூலம் பெறப்பட்ட கடன் 47.732 பில்லியன் டொலர்களாகவும், திறைசேரி உண்டியல்கள் மூலம் பெறப்பட்ட கடன் 7.045 பில்லியன் டொலர்களாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டுக் கடனும் அதிகரிப்பு

மத்திய அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கடன் ஜூன் மாத இறுதியில் 38.008 பில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது.

2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் முடிவில் 37.468 பில்லியன் டொலர்களாக இருந்த வெளிநாட்டுக் கடன், இரண்டாவது காலாண்டில் மேலும் 540 மில்லியன் டொலர்களால் அதிகரித்துள்ளது.

வெளிநாட்டுக் கடனில் பலதரப்பு கடன்கள் 14.802 பில்லியன் டொலர்களாகவும், வர்த்தகக் கடன்கள் 12.409 பில்லியன் டொலர்களாகவும், இருதரப்பு கடன்கள் 10.797 பில்லியன் டொலர்களாகவும் உள்ளன.

இருதரப்பு கடன் வழங்குநர்களில் சீனாவிடம் இலங்கை செலுத்த வேண்டிய தொகை 5.0067 பில்லியன் டொலர்களாக உள்ளது. ஜப்பானிடம் 2.2727 பில்லியன் டொலர்களும், இந்தியாவிடம் 853.9 மில்லியன் டொலர்களும் கடனாக உள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.

பலதரப்பு கடன்களில் ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் 6.8851 பில்லியன் டொலர்களும், உலக வங்கியிடம் 4.6662 பில்லியன் டொலர்களும், சர்வதேச நாணய நிதியத்திடம் 2.6152 பில்லியன் டொலர்களும் நிலுவையில் உள்ளன.

இரண்டாவது காலாண்டில் ரூ.2,698.6 பில்லியன் கடன் சேவை

2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் அரசாங்கம் கடன் சேவைக்காக மொத்தம் 2,698.6 பில்லியன் ரூபாவை செலுத்தியுள்ளது.

இதில் உள்நாட்டுக் கடன்களுக்காக 2,441.6 பில்லியன் ரூபாவும், வெளிநாட்டுக் கடன்களுக்காக 257 பில்லியன் ரூபாவும் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நாட்டின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் பல்வேறு கடன் வழங்குநர்களுடன் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், சில ஒப்பந்தங்கள் ஏற்கனவே நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொது கடன் முகாமைத்துவ அலுவலகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், 13 நாடுகளுடன் தொடர்புடைய கடன் சேவை மறுசீரமைப்பு நடவடிக்கைகள் இன்னும் தொடர்வதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore