கொழும்பு, செப். 01: 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை அனைத்து நீதியரசர்களையும் உள்ளடக்கிய பூரண அமர்வு முன்னிலையில் விசாரிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.
தலைமை நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று இந்த மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பாக மொத்தம் 67 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 41 மனுக்கள் இணையவழியாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திருத்தச் சட்டமூலம் உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பான ஏற்பாடுகளை உள்ளடக்கியுள்ளது.
பூரண அமர்வு கோரிக்கை
மனுதாரர்களில் ஒருவரான இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், இந்த சட்டமூலம் நீதித்துறையின் சுயாதீனத்துடன் நேரடியாக தொடர்புடையது என்பதால், அனைத்து உயர் நீதிமன்ற நீதியரசர்களையும் உள்ளடக்கிய பூரண அமர்வு முன்னிலையில் மனுக்களை விசாரிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் தற்போதைய நீதியரசர்களின் பதவிக்காலம் மற்றும் ஓய்வுபெறும் வயது தொடர்பில் தாக்கம் ஏற்படக்கூடும் என்பதால், நலன்களுக்கு இடையிலான முரண்பாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகள் வாதிட்டனர்.
மேலும், அரசியலமைப்பின் 03 மற்றும் 04ஆவது உறுப்புரைகளுடன் இந்த திருத்தம் தொடர்புபடுவதால், சில ஏற்பாடுகளுக்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியமாகலாம் என்றும் அவர்கள் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினர்.
அரச தரப்பின் நிலைப்பாடு
அரசாங்கம் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன, உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாமை நியமிக்கும் அதிகாரம் தலைமை நீதியரசருக்கு உரியது என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இரு தரப்பினரதும் சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதியரசர்கள் குழாம், பூரண அமர்வில் விசாரிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்தது.
இதன்படி, தற்போதுள்ள ஐவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையிலேயே 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிரான 67 மனுக்களின் விசாரணை தொடர்ந்து நடைபெறும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நீதித்துறை மறுசீரமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராகவும் 5 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





