பல்கலைக்கழக பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி நாளை விரிவுரையாளர்கள் போராட்டம்

கொழும்பு, செப். 01: அரச பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை வழங்க அரசாங்கம் தவறியுள்ளதாக குற்றஞ்சாட்டி, நாளை (02) போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் (FUTA) தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டிலுள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த விரிவுரையாளர்கள் நாளை மதிய உணவு வேளையில் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக FUTA செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்துடன் ஏற்கனவே கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதுடன், தீர்வுகளுக்கான யோசனைத் திட்டமும் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், கலந்துரையாடல்களில் எட்டப்பட்ட உடன்பாடுகளும் முன்வைக்கப்பட்ட யோசனைகளும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் பல்கலைக்கழக அமைப்பின் பிரச்சினைகள் தொடர்பில் எழுத்து மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

விரிவுரையாளர்கள் எண்ணிக்கை குறைவு

2015ஆம் ஆண்டில் அரச பல்கலைக்கழகங்களில் வருடாந்தம் சுமார் 25,000 மாணவர்கள் இணைக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 45,000 வரை அதிகரித்துள்ளதாக FUTA தெரிவித்துள்ளது.

அதேவேளை, 2015ஆம் ஆண்டில் சுமார் 5,800 விரிவுரையாளர்கள் அரச பல்கலைக்கழக அமைப்பில் இருந்ததாகவும், அவர்களில் 1,000க்கும் மேற்பட்டோர் தற்போது பல்கலைக்கழக சேவையிலிருந்து விலகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரிவுரையாளர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்புகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பல பதவிகளுக்கு விண்ணப்பிக்கக்கூடியவர்கள் குறைவாக உள்ளதாகவும் FUTA சுட்டிக்காட்டியுள்ளது.

அரச பல்கலைக்கழக அமைப்பு சீர்குலைவது நாட்டின் எதிர்காலத்தையே பாதிக்கும் என எச்சரித்துள்ள FUTA, பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் எதிர்வரும் வாரங்களில் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தத் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore