உலக சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை இன்று (02) காலை பெரல் ஒன்றுக்கு 96 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளது.
2026 ஜூன் 8ஆம் திகதிக்குப் பின்னர் முதல் முறையாக பிரென்ட் கச்சா எண்ணெய் இந்த விலை மட்டத்தை எட்டியுள்ளது. இன்று காலை நிலவரப்படி, அதன் விலை 2.19 வீதம் அதிகரித்து 96.13 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம், ஹோர்முஸ் ஜலசந்தி ஊடான கப்பல் போக்குவரத்தில் ஏற்படும் இடையூறுகள் மற்றும் பாரசீக வளைகுடா நாடுகளிலிருந்து எண்ணெய் விநியோகம் குறைவடையும் நிலை ஆகியவை விலை உயர்வுக்கு முக்கிய காரணிகளாகக் குறிப்பிடப்படுகின்றன.
இந்நிலை தொடருமானால், இந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை பெரல் ஒன்றுக்கு 120 அமெரிக்க டொலரையும் தாண்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், உக்ரைன் மற்றும் பாரசீக வளைகுடா பகுதிகளில் நீடிக்கும் மோதல்கள், உலகளாவிய பெட்ரோல் மற்றும் டீசல் சந்தைகளில் விநியோக பாதிப்புகள் ஏற்படும் அபாயத்தை மேலும் அதிகரித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.





