ஈரான் மீது அமெரிக்கா மேற்கொண்ட புதிய தாக்குதல்களுக்கு பதிலடியாக, மத்திய கிழக்கில் அமெரிக்காவுடன் தொடர்புடைய இராணுவ நிலைகளை இலக்காகக் கொண்டு ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது.
பல வாரங்களுக்குப் பின்னர் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவ இலக்குகள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டதாக தெரிவித்துள்ளது.
அகாபா நகருக்கு அருகிலுள்ள அமெரிக்க கடற்படைத் தளமும் தாக்குதலுக்கான இலக்குகளில் ஒன்றாக இருந்ததாக IRGC கூறியுள்ளது. இதேவேளை, ஈராக், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்கத் தொடர்புடைய நிலைகளையும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் இலக்கு வைத்ததாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஜோர்தான் ஆயுதப் படைகளின் தகவலின்படி, ஈரானில் இருந்து 13 பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஜோர்தான் வான்பரப்புக்குள் நுழைந்துள்ளன. அவற்றில் 10 ஏவுகணைகள் வான்பாதுகாப்பு அமைப்புகளால் இடைமறித்து அழிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய மூன்று ஏவுகணைகள் தொலைதூரப் பகுதிகளில் விழுந்துள்ளன. இந்தச் சம்பவங்களில் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் எதுவும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் தாக்குதலில் அமெரிக்க இராணுவத்தினர் உயிரிழந்ததாக IRGC தெரிவித்திருந்த போதிலும், ஜோர்தானில் அமெரிக்க வீரர்கள் உயிரிழந்ததற்கான எந்தவொரு ஆதாரமும் ஆரம்பகட்ட மதிப்பீடுகளில் கிடைக்கவில்லை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பஹ்ரைனும் ஈரானிய ட்ரோன்களை தமது வான்பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்ததாக கூறியுள்ள நிலையில், குவைத் இராணுவம் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக தெற்கு ஈரானில் உள்ள IRGC இலக்குகளை நோக்கி அமெரிக்கா புதிய தாக்குதல்களை நடத்தியிருந்தது. வான்பாதுகாப்பு நிலையங்கள், ரேடார் அமைப்புகள், கடல்சார் வளங்கள், கண்ணிவெடி அமைக்கும் திறன்களுடன் தொடர்புடைய கட்டமைப்புகள் மற்றும் தகவல் தொடர்பு நிலையங்கள் உள்ளிட்டவை அமெரிக்கத் தாக்குதல்களின் இலக்குகளாக இருந்ததாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
ஹோர்முஸ் ஜலசந்தி ஊடாகச் செல்லும் வர்த்தகக் கப்பல்கள் மற்றும் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கப் பணியாளர்களை இலக்காகக் கொண்டு IRGC தாக்குதல்களை மேற்கொள்ள முயன்றதாகக் கூறியே அமெரிக்கா இந்த நடவடிக்கையை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தெற்கு ஈரானின் சிரிக் மாவட்டத்தில் திருமண நிகழ்வு இடம்பெற்றுக்கொண்டிருந்த குடியிருப்பு கட்டடம் ஒன்றும் அமெரிக்கத் தாக்குதலில் சேதமடைந்ததாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஆரம்பகட்ட தகவல்களில் குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்ததாகவும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளதாக ஈரானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் பதிலடி தாக்குதலை மேற்கொண்டால், அதற்கு முன்னெப்போதையும் விட கடுமையான இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





