ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மும்மொழிகளிலும் ‘இஸ்லாமியக் கலைச்சொற்களுக்கான மும்மொழி அகராதி’ (Trilingual Glossary of Islamic Terminologies) ஒன்றை உருவாக்கும் திட்டத்தின் முதற்கட்ட அமர்வு பேருவளை ஜாமியா நளீமிய்யா இஸ்லாமிய கலாபீடத்தில் நடைபெற்றுள்ளது.
கடந்த 2026 ஆகஸ்ட் 19ஆம் திகதி, ஜாமியா நளீமிய்யா இஸ்லாமிய கலாபீடத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இவ்வமர்வில், இலங்கையில் முறையானதும் விரிவானதுமான இஸ்லாமியக் கலைச்சொல் அகராதியொன்றின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
அரச கரும மொழிகள் திணைக்களமும் ஜாமியா நளீமிய்யா இஸ்லாமிய கலாபீடமும் இணைந்து இத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.
முன்மொழியப்பட்டுள்ள மும்மொழி அகராதியில் அடிப்படை இஸ்லாமியக் கருத்துக்கள், மத நடைமுறைகள், இஸ்லாமிய கலாசாரம் மற்றும் பாரம்பரியம் சார்ந்த முக்கிய கலைச்சொற்கள் உள்ளடக்கப்படவுள்ளன.
இந்த அகராதி எதிர்காலத்தில் இஸ்லாமியக் கல்வி, கல்வியியல் ஆய்வுகள், மொழிபெயர்ப்பு, அரச மற்றும் அதிகாரப்பூர்வ தொடர்பாடல் உள்ளிட்ட துறைகளுக்கும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கும் பயனுள்ள வழிகாட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமர்வின் போது அகராதியின் எல்லை, தொகுப்பு முறைகள், மொழிபெயர்ப்பு அணுகுமுறைகள் மற்றும் தொகுப்பு நடைமுறைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் அரச கரும மொழிகள் திணைக்களம் மற்றும் ஜாமியா நளீமிய்யா இஸ்லாமிய கலாபீடத்தைச் சேர்ந்த பல்வேறு பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
மேலும், ஜாமியா நளீமிய்யா இஸ்லாமிய கலாபீடத்தின் முதல்வர் ஏ.ஸீ. அகார் முஹம்மத் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டார்.
காலத்திற்குப் பொருத்தமான இந்த முக்கிய முயற்சியை முன்னெடுத்துவரும் அரச கரும மொழிகள் திணைக்களத்திற்கு ஜாமியா நளீமிய்யா இஸ்லாமிய கலாபீடம் தனது நன்றியைத் தெரிவித்துள்ளதுடன், இத்திட்டத்தின் வெற்றிகரமான நிறைவிற்குத் தொடர்ந்து ஒத்துழைக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.





