உக்ரைன் தனது ஆளில்லா விமானத் தாக்குதல்களை ரஷ்யாவுக்குள் மேலும் தீவிரப்படுத்தி வரும் நிலையில், ரஷ்ய வான்வெளியைப் பயன்படுத்தும் விமான நிறுவனங்களுக்கு உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்ய வான்வெளியில் ட்ரோன் நடவடிக்கைகள் அதிகரிக்கக்கூடும் என்பதால், அங்கு விமானப் போக்குவரத்துக்கான பாதுகாப்பு அபாயம் அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய வான்வெளியைப் பயன்படுத்தும் விமான நிறுவனங்கள் மற்றும் காப்புறுதி நிறுவனங்கள் இந்த அபாயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் ஸெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ஸெலென்ஸ்கியின் கருத்துகளை கடுமையாக விமர்சித்துள்ளதுடன், உக்ரைனுடனான மோதல் தொடர்பான ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகள் தொடரும் என தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக ரஷ்யாவின் பல விமான நிலையங்களில் கடந்த சில மாதங்களாக விமான சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மொஸ்கோவில் உள்ள முக்கிய விமான நிலையங்களிலும் பல சந்தர்ப்பங்களில் விமானப் புறப்பாடுகள் மற்றும் வருகைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
சீனா, துருக்கி உள்ளிட்ட சில நாடுகளின் விமான நிறுவனங்கள் இன்னும் ரஷ்ய வான்வெளியைப் பயன்படுத்தி வருகின்றன. ஆசியா–ஐரோப்பா வழித்தடங்களில் ரஷ்ய வான்வெளியைப் பயன்படுத்துவதன் மூலம் நேரம் மற்றும் எரிபொருள் சேமிப்பு கிடைப்பதே இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்நிலையில், ரஷ்யாவுக்குள் ஆழமான பகுதிகளிலும் உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரிக்கக்கூடிய சாத்தியம் இருப்பதாக விமானப் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனிடையே, உக்ரைனின் தலைநகர் கீவ் மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் தொடர்ச்சியாக தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





