வீட்டிலேயே மேற்கொள்ளக்கூடிய புதிய வகை சிறுநீர் பரிசோதனை மூலம் சிறுநீர்ப்பை புற்றுநோயின் 10 நோயாளிகளில் 9க்கும் அதிகமானவர்களை அடையாளம் காண முடியும் என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்தில் உள்ள ஏழு மருத்துவமனைகளில் சுமார் 1,000 நோயாளிகளை உள்ளடக்கி இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. பர்மிங்ஹாம் பல்கலைக்கழகம் மற்றும் Nonacus நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு, European Urology Oncology இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
NHS மேற்கொண்ட பரிசோதனையில், இந்த சிறுநீர் பரிசோதனை சிறுநீர்ப்பை புற்றுநோயாளிகளில் 92% பேரை சரியாக அடையாளம் கண்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பரிசோதனையின் முடிவு எதிர்மறையாக இருந்தால், சம்பந்தப்பட்ட நபருக்கு சிறுநீர்ப்பை புற்றுநோய் இல்லாதிருப்பதற்கான வாய்ப்பு 99%-க்கும் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பரிசோதனை சிறுநீரில் காணப்படும் புற்றுநோய் செல்களின் மரபணு மாற்றங்களை அடையாளம் காணும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. சிறுநீர்ப்பை புற்றுநோயுடன் தொடர்புடைய 23 மரபணுக்களில் 450க்கும் மேற்பட்ட DNA மாற்றங்களை இது பரிசோதிக்கிறது.
எனினும், இந்த பரிசோதனை தற்போது சிஸ்டோஸ்கோபி (cystoscopy) எனப்படும் மருத்துவ பரிசோதனைக்கு மாற்றாக கருதப்படவில்லை. ஆனால், அவசரமாக மேலதிக பரிசோதனை தேவைப்படும் நோயாளிகளை அடையாளம் காண இது உதவக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இங்கிலாந்தில் ஆண்டுதோறும் 300,000க்கும் மேற்பட்ட சிஸ்டோஸ்கோபி பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால், புதிய பரிசோதனை பரவலாக பயன்பாட்டுக்கு வந்தால், பல நோயாளிகள் அதிக ஊடுருவல் கொண்ட பரிசோதனைகளைத் தவிர்க்கக்கூடிய வாய்ப்பு உருவாகலாம்.
சிறுநீரில் இரத்தம் காணப்படுவது சிறுநீர்ப்பை புற்றுநோயின் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகும். நோய் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவது சிகிச்சை வெற்றிக்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.
ஆயினும், இந்த புதிய பரிசோதனையின் செயல்திறனை உறுதிப்படுத்த மேலும் பெரிய அளவிலான ஆய்வுகள் தேவைப்படுகின்றன என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.





