2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 188 புள்ளிகளைப் பெற்று தமிழ் மொழி மூலம் தேசிய ரீதியில் முதலிடத்தை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவன் பெற்றுள்ளார்.
யாழ்ப்பாணம் மல்லாகம் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி கனிஷ்ட வித்தியாலயத்தில் கல்வி பயிலும் சுரேந்தர் சபின் என்ற மாணவரே இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
இதேவேளை, சிங்கள மொழி மூலம் பரீட்சையில் அதிகூடிய புள்ளியாக 193 புள்ளிகள் பதிவாகியுள்ளன. இந்தப் பெறுபேறு குருநாகல் மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.
இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் அதிகூடிய வெட்டுப்புள்ளி 139 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெறுபேறுகளின் அடிப்படையில் சுமார் 56,000 மாணவர்கள் வெட்டுப்புள்ளியை விட அதிகமான புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 9ஆம் திகதி நடைபெற்ற பரீட்சைக்கு 294,132 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 289,867 பேர் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.





