பொதுமக்கள் எதிர்கொண்டு வரும் PAYE (Pay-As-You-Earn) வரிச்சுமையை குறைப்பதற்கு அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர்களின் 21ஆவது வருடாந்த மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய வரிச்சுமை நிலைமைக்கு விரைவான தீர்வு தேவைப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், வரி செலுத்துவோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் தேவையான மறுசீரமைப்புகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், வளர்ச்சியடைந்த நாடுகளின் தரத்திற்கு இணையான வகையில் இலங்கையின் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவமும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த மாநாட்டில் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர, உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் ஆர்.பி.எச். பெர்னாண்டோ உள்ளிட்ட பல உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.





